Friday 30 November 2018

ஆத்திச்சூடி நீதி கதைகள்


அறம் செய விரும்பு

––––––––––––––––––––––––


(விளக்கம்: தர்ம செயல்களைச் செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும்)
----------------------------------------------   
என்னங்க அடுத்த வாரம் நம்ம பையனுக்கு பிறந்த நாள் வருது. அவனுக்கு டிரஸ் எடுக்கணும்.
பையன் இந்த வருடம் பிறந்த நாளுக்கு அவனோட நண்பர்களுக்கு விருந்து கொடுக்கணும்னு ஆசைப்படுறான்.
அதனால் ஏதாவது ஓட்டலில் சின்னதா ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தா நல்லா இருக்கும்... என்று தனது கணவரிடம் மகனின் ஆசையை எடுத்து கூறினாள் கற்பகம்.
என்ன கற்பகம்... நம்ம வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் நாம வழக்கமா என்ன செய்வோம்னு உனக்கு தெரியாதா... புதுசா ஏதோ சொல்ற.
பசங்கன்னா அவங்க ஆசைப்படுவதை சொல்லத்தான் செய்வாங்க. நாம தான் அவங்களுக்கு நம்ம எண்ணத்தை விளக்கி கூறனும் என்று கூறினார் ராமன்.
தனியார் வங்கியில் வேலை பார்த்து வருபவர் ராமன்.
சமூக அக்கறையுடன் பிறருக்கு உதவி செய்யும் நல்ல மனம். எந்த செயல் செய்தாலும் அது பிறருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.
அவரது மனைவி கற்பகம். வீட்டை கவனித்து கொள்பவர். அவர்களது மகன் சந்தோஷ். 8ம் வகுப்பு படித்து வருகிறான்.
அவர்கள் வீட்டில் யாருக்காவது பிறந்த நாள், அல்லது விசேஷம் என்றால் ராமன் தனது குடும்பத்துடன் அருகில் இருக்கும் அனாதை விடுதிக்கு தனது குடும்பத்துடன் சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு கொடுப்பது வழக்கம்.
அதை தவிர ஏழை மாணவர்களின் படிப்புக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருவார் ராமன்.

இந்த ஆண்டு தனது பிறந்த நாளை தனது நண்பர்களுடன் கொண்டாட சந்தோஷ் ஆசைப்பட்டான்.

தனது விருப்பத்தை தாயிடம் தெரிவித்தான்.

அதற்கு தந்தை பதில் எதுவும் கூறாததால், மறுநாள் அவரிடம் நேரடியாக கேட்கலாம் என்று முடிவு செய்து தந்தையிடம் தனது நண்பர்களுக்கு விருந்து கொடுப்பது பற்றி கேட்டான் சந்தோஷ்.
டே சந்தோஷ் நாளைக்கு உனக்கு பிறந்த நாள். காலையில் அனாதை இல்லத்துக்கு சென்று உணவு கொடுப்போம் அதற்கு பின் பார்க்கலாம் என்று சமாளித்தார் ராமன்.
உடனே சந்தோஷுக்கு கோபம் வந்தது.
அப்பா அங்க இருக்கிறவங்க யாருமே நமக்கு தெரியாது. அவங்களுக்கு சாப்பாடு கொடுக்கிறதால நமக்கு என்ன வந்துச்சு. பிறருக்கு உதவி செய்வதால் நமக்கு எந்த பயனும் கிடையாது என்று கூறினான்.
தனது மகன் தர்மம் செய்யும் எண்ணம் இல்லாமல் இருப்பதை புரிந்து கொண்ட ராமன், அவனுக்கு அதை பக்குவமாக எடுத்து கூறினார்.
சந்தோஷ். அனாதை இல்லத்தில் இருப்பவர்களுக்கு தாய், தந்தை கிடையாது. அவங்களுக்கு நல்ல சாப்பாடு கிடைக்காது. நல்ல டிரஸ் கிடைக்காது. கிடைத்ததை வைத்து வாழ்பவர்கள் அவர்கள். நம்மை போன்றவர்கள் அவர்களுக்கு செய்யும் சிறிய உதவி, பெரிய சந்தோஷத்தை கொடுக்கும்.
சந்தோஷ். நான் சிறு வயதில் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டவன்.
எங்க அப்பா கூலி தொழிலாளி. நாங்க ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் சாப்பிடுவோம். மற்ற நேரமெல்லாம் பட்டிணியில் தான் இருப்போம். பசியின் கொடுமை எப்படி இருக்கும் என்று நான் அனுபவித்து இருக்கிறேன். படிக்க வசதி கிடையாது.
ஒரு சிலர் செய்த உதவியால் தான் படிச்சு நான் வாழ்க்கையில் முன்னேறினேன்.
எனக்கு யாரும் உதவி செய்யாமல் இருந்தால் நானும் படிக்காமல் கூலி வேலைக்கு தான் சென்று இருப்பேன். நீயும் இந்த மாதிரி சந்தோஷமாக இருக்க முடியாது.
நாம் செய்யும் தர்மம் நம்மை மட்டுமல்ல... நம் சந்ததியையே வாழ வைக்கும்.
நமக்கு வீடு, நல்ல டிரஸ், நல்ல சாப்பாடு இல்லாம கஷ்டப்பட்டா எப்படி இருக்கும்னு நீயே யோசித்து பாரு...
நீயும் உன்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும் என்பதற்காகவே உன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் இந்த மாதிரி அனாதை இல்லங்களுக்கு உணவு கொடுத்து அவங்களோட கஷ்டத்தை உனக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.
தர்மச் செயல்களை விருப்பத்துடன் செய்ய வேண்டும் என்று ராமன் கூறினான்.
தனது தந்தை கூறியதை கேட்ட சந்தோஷிற்கு கண்ணில் கண்ணீர் வந்தது. தான் பேசுவது தவறு என்று உணர்ந்தான்.
உடனே கற்பகம் வேகமாக வந்து என்னங்க... சின்ன பையனிடம் போய் இதெல்லா சொல்லிக்கிட்டு என்று சந்தோஷை தன் பக்கம் இழுத்து, சரி சரி நாளைக்கு காலையில் பார்த்துக் கொள்ளலாம் தூங்க போங்க என்று கூறி தனது மகனுடன் தூங்க சென்றாள் கற்பகம்.
காலை பொழுது விடிந்ததும் புத்தாடை அணிந்தான் சந்தோஷ்.
தாயும் தந்தையும் அவனுக்கு வாழ்த்து சொல்லி இனிப்பு வழங்கினர். பின்னர் கோவிலுக்கு சென்று விட்டு அருகில் உள்ள அனாதை இல்லத்துக்கு மூன்று பேரும் சென்றனர்.
அங்கிருந்தவர்களுக்கு தான் ஏற்பாடு செய்த உணவுகளை கொடுக்க சென்றார் ராமன்.
அப்போது சந்தோஷ், தனது தந்தையிடம் அப்பா நானே என் கையால் அவர்களுக்கு கொடுக்கிறேன் என்று கூறி அங்கிருந்தவர்களுக்கு தனது கையால் உணவு பரிமாறினான். மேலும் தான் கொண்டு வந்த இனிப்புகளையும் அனைவருக்கும் வழங்கினான்.
அவர்கள் அந்த உணவுகளை ஆனந்தமாக ரசித்து, ருசித்து சாப்பிடுவதை பார்த்து சந்தோஷ் மகிழ்ச்சி அடைந்தான்.

அங்கிருந்தவர்கள் சந்தோஷிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள்.
தனது மகனின் செயலை கண்டு ராமன் ஆனந்தமடைந்தார்.
சந்தோஷ் ஆசைப்பட்டதை போல் அவனது நண்பர்களுக்கு ஓட்டலில் விருந்து கொடுத்தார் ராமன்.
தனது தந்தையை போல சந்தோஷ், தர்ம செயல்களை விருப்பப்படி செய்ய தொடங்கினான்.      

பாரதியின் புரட்சி வரிகள்

‘‘பாரதியின் புரட்சி வரிகளுக்கு எழுச்சிக் கதைகள்’’    "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்  இனிதாவ தெங்கும் காணோம்"  எனக் கூறிய பாரதிய...