Friday 24 August 2018

மறக்க முடியாத நினைவுகள்

‘‘ஹலோ மாமா, நான் கீதா பேசுறேன்...’’ 
‘‘சொல்லுப்பா’’. 
‘‘‘நீங்க நல்லா இருக்கீங்கள?அத்தை, கரண், கவிதா எல்லாரும் நல்லா இருக்காங்களா...?’’ 
‘‘எல்லாரும் நல்லா இருக்காங்க’’. 
‘‘நீ எப்படி இருக்க... நல்லா படிக்கிறயா...’’
‘‘ஆமாம் மாமா நல்லா படிக்கிறேன்...’’ 
‘‘மாமா... கரணுக்கும் கவிதாவுக்கும் எப்ப பரீட்சை முடியுது... நீங்க எப்ப ஊருக்கு வரீங்கன்னு அம்மா கேட்டாங்க... 
அம்மா பேசணும்மாம் மாமா...’’
‘‘சரி செல் போனை உங்க அம்மாகிட்ட கொடு...’’ 
‘‘அக்கா சொல்லுங்க அக்கா... எப்படி இருக்கீங்க..’’. 
‘‘நான் நல்லா இருக்கேன்’’.

‘‘நீங்க எல்லாம் நல்லா இருக்கேங்களா...’’ 
‘‘நாங்க நல்லா இருக்கோம்...’’
‘‘இங்க வேலை சரியா இருக்கு அக்கா. அதுதான் பேச முடியலே...
காலையிலே எழுந்ததும், இரண்டு பேரும் வேலைக்கு பேரதுக்காக சாப்பாடு செஞ்சு, பசங்கள ஸ்கூலுக்கு கிளப்பி விட்டுட்டு இரண்டு பேரும் வேலைக்கு கிளம்பி போகுறதும்...திரும்ப ராத்திரி வீட்டுக்கு வந்து சமையல் செஞ்சு சாப்பிடுறதுக்கும் நேரம் சரியா இருக்கு அக்கா...ஞாயிற்று கிழமை ஒரு நாள் தான் விடுமுறை என்பதால் மத்த வேலையை செய்யவே நேரம் சரியா இருக்கு...அதுதான் உங்க கிட்ட கூட பேச முடியல அக்கா....’’ 
‘‘சென்னையில் வெயில் எப்படி இருக்கு?’’
‘‘இங்க கொஞ்சம் அதிகமா தான் இருக்கு அக்கா... ஊர்ல அக்கா....’’
‘‘இங்க வெயில் கொஞ்சம் அதிகமா இருக்கு... வெக்கை தாங்க முடியலடா...
ஊர்ல அடுத்த வாரம் பங்குனித் திருவிழாவிற்கு கோவிலில் கொடி கட்டுராங்க. திருவிழாவிற்கு நீங்க எல்லாம் வரணும்...அதுதான் எப்ப பரீட்சை முடியுது, நீங்க எப்ப வரேங்கண்ணு கேட்கலாம்னு போன் செஞ்சேன்’’. 
‘‘அக்கா, பசங்க 2 பேருக்கும் பரீட்சையே அடுத்த வாரம் தான் ஆரம்பிக்க போகுது... 
என் மனைவி சாந்திக்குக்கூட அடுத்த வாரம் அவங்க ஆபிஸ்ல வேலை அதிகமா இருக்கு. லீவு கிடைக்காதுன்னு சொல்லிட்டா. அதனால கோவில் திருவிழாவிற்கு வருவது ரொம்ப கஷ்டம் அக்கா... ’’
‘‘என்னடா இப்படி சொல்ற....? வருஷத்துக்கு ஒருமுறை திருவிழா வருது. அம்மா, அப்பா தான் நமக்கு இல்லை... 
நீயாவது திருவிழாவிற்கு வருவ... அது ஒரு சந்தோஷமா இருக்கும். உன்னுடைய பிள்ளைகளை வருஷத்துக்கு ஒருமுறையாவது பார்த்தமாதிரி இருக்கும்... உன் பையன் 4 வகுப்பும் உன் பொண்ணு 6ம் வகுப்பு தானடா படிக்குது... அதுக்கே இப்படி லீவு கிடைக்கலைனு சொல்ற... உன் வீட்டுக்காரிகிட்ட சொல்லி வரமுடியுமான்னு பாரு...’’ 
‘‘ அக்கா... பரீட்சை முடிஞ்சதும் ஒரு வாரம் வந்துட்டு போறோம்...’’ 
‘‘இப்படி தான் ஒவ்வொரு வருஷமும் நீ சொல்ற...’’
‘‘ அக்கா... கோவில் திருவிழா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்... முழு பரீட்சை எப்ப முடியும்... கோவில் திருவிழா எப்ப வரும்ணு நாம எல்லாம் காத்துக்கிடந்த காலம் இப்பயும் எனக்கு கண்ணு முன்னாலே இருக்கு... 
கோவிலில் கொடி கட்டியதும் அங்க சாமி பாட்டு போட்டா போதும், பசங்க எல்லாம் அங்கேயே கோவில் மைதானத்தில் ஓடி பிடிச்சு விளையாடுறதும் 
ராத்திரி ஆனா பாட்டு கச்சேரியும் கரகாட்டம் கும்மி ஆட்டம் பார்க்கிறதும் என்ன சந்தோஷம்.... 
பரீட்சை முடிஞ்சதும் நம்ம ஒரு வாரத்துக்கு நம்ம அத்தை வீட்டுக்கு போகுறதும், நம்ம அத்த பசங்க எல்லாரும் ஒரு வாரத்துக்கு நம்ம வீட்டு வந்து விளையாடுறதும் மறக்க முடியலை... 
பரீட்சை முடிஞ்சதும், லீவு விட்டா... போதும், காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் தெருவிலே தான் விளையாடிக்கிட்டு இருப்போம்... 
தெரு பசங்க எல்லாம் சேர்ந்துகிட்டு, ஒரு வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டு, ஒரு மணி நேரத்துல ஆளாளுக்கு மாத்தி மாத்தி ஓட்டி விளையாடுறதும்... 
சைக்கிள் டயர, வண்டி மாதிரி கட்டையை வச்சு ஓட்டிக்கிட்டும் 
காலையில் 2 பெரிய நுங்கு வாங்கி அதுல இருக்கிற நுங்குவை இரண்டு பேரும் சண்டை போட்டுகிட்டே சாப்பிடுறதும்... அதக்கு அப்பறம் அந்த நுங்கு கூட வச்சு வண்டி மாதிரி செஞ்சு எல்லா தெருவையும் சுத்தி வரதும்... 
உச்சி வெயில, நடு ரோட்டல பம்பரம் விளையாடிக்கிட்டு, யாரு பம்பரத்துக்கு யாரு ஆக்கர் வைக்கிறதுண்ணு போட்டி போட்டு பசங்க எல்லாம் விளையாடுறதும்... 
கோலிக் குண்டு வச்சு விளையாடுறதும்... அதுவும் பொடிக் கடையில போய், வகை வகையான குண்டுகளை வாங்கிட்டு வந்து விளையாடுறதும்... 
சீட்டு கட்டு வைத்து கழுதை விளையாட்டும் ரம்மி விளையாட்டும் விளையாடி ஒவ்வொருத்தரையும் ஆட்டைய விட்டு வெளியேத்தி விளையாடுறதும் இப்பவும் நினைச்ச ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா..’’
‘‘ டேய் அதுவிடு, தெருவில் உள்ள எல்லாரும் சேர்ந்து, பக்கத்து கிராமத்துக்கு நடந்தே போய், அங்கு பம்பு செட்டுல குளிச்சிக்கிட்டும் கிணற்றில் குதித்து விளையாடியதும்... புளிய மரத்தில புளியங்காய் அடிச்சு சாப்பிட்டதும், மாங்காய் தோப்புக்குல்ல புகுந்து மாங்கா சாப்பிட்டதனும் அய்யோ மறக்க முடியலைடா... அதை விட கூட்டாஞ்சோறு செஞ்சு சாப்பிட்டுவோமே...’’ 
‘‘ அக்கா, நீங்களும் பக்கத்து வீட்டு ராதா அக்கா, செல்வி அக்கா, பொம்மி அக்கா எல்லோரும், தாயக் கட்டம் விளையாடுறதும் பாண்டி பலகை விளையாடுறதும்.... 
அய்யோ அவங்க கூட பந்தயம் கட்டி ஸ்கிப்பிங் குதித்து விளையாடு வாங்களே... அக்கா அது எப்படி...’’
‘‘ அத விடு, குதிரை விளையாட்டு விளையாடும் போது ஒவ்வொருத்தரையும் குனிய வைத்து தாண்டி போவதும் பரம பதம் விளையாடுறதும் இப்ப நினைச்சாலும் மறக்க முடியாத நினைவுகள் தாண்டா...’’ 
‘‘ நமக்கு அப்ப எல்லாம் அக்கினி நட்சத்திரம் வெயிலே தெரியாது... அந்த அளவுக்கு எப்பவுமே மொட்ட வெயிலே கிட்டி விளையாடுறதும், பந்து விளையாடுறதும்... ஓடி பிடிச்சி விளையாடுறதும் பொழுது சும்மா பறந்து போகும் அக்கா... 
ராத்திரி ஆனா போதும் எல்லாரும் தெருவுல அவுங்க அவுங்க வீட்டு கட்டுல போட்டு படுத்து கிடக்கிறதும் ஒவ்வொருத்தரு வீட்டு வாசலுக்கு போய் உட்கார்ந்து கதை பேசுறதும்... திருடன் போலீஸ் விளையாட்டுறதும் மறக்க முடியலை...’’ 
‘‘ அதை விடுங்க அக்கா... நம்ம இரண்டு பேரும் சாப்பிடும் போது ஒரு வடைக்கு எவ்வளவு சண்டை போட்டிருக்கோம்... 
உடனே நீங்க பேசாம... சாப்பிட மாட்டேன்னு போவீங்க... அம்மா நம்மள சமதானப்படுத்தி.... போய் அக்காவை சமதானப்படுத்துனு சொல்லுவாங்க... அதலாம் இப்ப நினைச்சாலும் கண்ணில் கண்ணீர் வருது அக்கா... 
நீங்க என்ன எவ்வளவு அடி அடிச்சிறுப்பிங்க, உங்கள நான் எவ்வளவு அடி அடிச்சு, தள்ளி விட்டுருப்பேன்... 
பாசத்தின் உச்சக்கட்டதை நாம அனுப்பவித்து, ரசித்து வாழ்ந்த காலம் அது... 
ரெண்டு பேரும் அடிச்சுக்கிட்டாலும், அம்மா, அப்பா, நாம எல்லாரும் ஒன்றா உட்கார்ந்து அந்த பழைய சாதத்தை சாப்பிட்ட சந்தோஷம் இன்னைக்கு நமக்கு கிடைக்கல அக்கா...’’
‘‘ அதை விடுப்பா... நம்ம எல்லாம் அந்த சந்தோஷத்த அனுபவித்து விட்டு வந்துட்டோம்...’’ 
‘‘ இப்ப கூட அந்த சந்தோஷத்த நேரடியை உட்கார்ந்து பேச முடியாம போன்ல பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கு....
நம்ம பசங்க...’’
‘‘ அக்கா, அடுத்து வர இந்த தலைமுறை எந்தவித இயற்கையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியலை அக்கா... 
இப்ப படிக்கிற பசங்களுக்கு பரீட்சை முடிஞ்சு லீவு விட்டா போதும். காலையில் 6 மணிக்கு இந்தி வகுப்பும் 10 மணிக்கு கம்ப்யூட்டர் வகுப்பும் மாலையில் பாட்டு கிளாஸ் அல்லது டான்ஸ் வகுப்புனு செட்டியூல் போட்டு கொடுக்கிறோம்... 
இதுக்கு இடைப்பட்ட நேரத்துல அந்த பசங்க டி.வி. பார்த்து அதுல வர்ற படத்தை பார்த்து சிரிக்கிறதுதான் அவங்களுக்கு சந்தோஷம்... 
அதை விட்டா இப்ப செல்போன்ல கேம்ஸ் விளையாடுறங்க... 
நம்ம தெருவில் விளையாடிய, டயர் விளையாட்டும், குண்டு விளை யாட்டும், பம்பரம் விளையாட்டும், கிட்டி, குதிரை விளையாட்டு, ஓட்டு பந்தயம், நொண்டி, தாயம், பாண்டி, பரம பதம் இவற்றை எல்லாம் இந்த பசங்க விளையாட முடியாம, இதை எல்லாம் கம்ப்யூட்டர்ல விளையாடுறங்க... 
இவர்களை நெனைச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா...’’
‘‘ இதுக்கு எல்லாம் என்ன காரணம் தம்பி....’’ 
‘‘ அக்கா... நம்ம அம்மா, அப்பா... நமக்கு படிப்பு கொடுத்தால் போதும் நினைச்சாங்க.... 
நம்ம என்ன நினைக்கிறோம்... நம்ம பசங்களுக்கு படிப்பு மட்டும் போதாது. அவங்க வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு போகவும் நல்லா சம்பாதிக்கிறதுக்கும் பல வழிமுறைகளையும் பாடமாக கற்றுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை... அதுதான் அக்கா அதற்கு காரணம்... 
இதனால இவங்க பாசத்தையும் அன்பையும் ஏன் இளமை பருவ விளையாட்டுக்களையும் இழக்க வேண்டி உள்ளது... 
இதை நெனஞ்சா எனக்கு ரொம்பவும் கவலையாக இருக்கு அக்கா... 
நம்முடைய பாரம்பரிய விளையாட்டுக்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறைய ஆரம்பிக்குது, அந்த விளையாட்டுக்களின் இனிமை வருங்கால தலைமுறைக்கு கிடைக்காம போகுது அக்கா... 
சரி அக்கா... நான் என் வீட்டுக்காரிக்கிட்ட கேட்டுட்டு முடிஞ்சா கோவில் திருவிழாவுக்கு ஊருக்கு வர பார்க்கிறேன்...’’ 

தம்பி – அக்கா இருவரும் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார்கள் இளமைக்கால மறக்க முடியாத நினைவுகளில் மூழ்கியபடியே.  

No comments:

Post a Comment

பாரதியின் புரட்சி வரிகள்

‘‘பாரதியின் புரட்சி வரிகளுக்கு எழுச்சிக் கதைகள்’’    "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்  இனிதாவ தெங்கும் காணோம்"  எனக் கூறிய பாரதிய...